தமிழ் சினிமாவிலெ வரும் சில பாட்டுக்கள் பாத்தா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ – ன்னு தான் யோசிக்கத் தோணுது..
சாதாரணமா இருக்கிறதை ஏதோ காதலிக்காக ஆகுற மாதிரி சொல்றது பழைய சரக்கு தான்.. பழைய செய்யுள் சொன்னா “ஒரு மண்ணும் புரியலைன்னு” கமெண்ட் வரும்.
ஆனா சினிமா பாட்டு புரியும். தெளிவுரை பொழிப்புரை தேவையில்லை.. (தேவை இல்லைன்னு சொல்லியே இம்புட்டு வியாக்யானம் எழுதுறெ??).. சரி விஷயத்துக்கு வர்ரேன்.
அச்சமில்லை அச்சமில்லைன்னு ஒரு படம். சரிதா நெல்லைத் தமிழ் பேசி கலக்கிய படம். தமிழ் படத்திற்கே Sub Tittle தேவைப்படும் அளவுக்கு நெடுநெல்லைத்தமிழ்.
(நான் நெல்லை நண்பர் ஒருவரை பக்கத்தில் வைத்து தான் ஓரளவு புரிந்து கொண்டேன்) அதில் ஒரு பாட்டு வரும். கதாநாயகியப் பாத்து வெக்கப்பட்டு செவ்வெந்திப் பூ சிவப்பாச்சி..
பாடல் பதிவின் போது அதனை செவ்வெந்திப் பூவும் சிவப்பாச்சி.. என்று மேலும் மெருகு ஏத்துனாங்களாம்.
வைரமுத்து வரவுக்குப் பிறகு வார்த்தை ஜாலங்கள் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. மனுஷனுக்கு வேத்துக் கொட்டினா, தண்ணியால கழுவலாம். “தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே..” இது வைர வரிகள்…
சாத்தியமா இதெல்லாம்…மூச் .. கேக்கவே கூடாது.
பயணங்கள் முடிவதில்லை. இதில் ஒரு பாட்டு
“கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அடித்ததினால்
கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரமில்லையோ??”
அந்தமான்ல எங்கே பாத்தாலும் தண்ணி தான்..(நீங்க நெனைக்கிற அந்த தண்ணியும் தான்)..கடல் முழுக்க தண்ணி.. இருந்தாலும் ஈரம் இல்லையான்னு கேக்கிறார் கவிஞர்.
எல்லாம் ஒரே காதல் பத்தி நெனைச்சாலே இப்ப்டித் தான் எழுத வருமோ??
இதெல்லாம் தூக்கி சாப்பிட்ற மாதிரி வந்திருக்கும் சமீபத்திய கற்பனை.
ஆத்தி..ஆத்தி..ஆத்தி. அதில்
“வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா?” என்று கவிஞர் கேக்கிறார்.
வெள்ளாவியில வச்சி வெளுத்தா இன்னா ஆகும்?? சரி.. நமக்கு எதுக்கு அந்த வம்பு??
அது சரி … தலைப்பு ஏதோ.. அடைந்தால் மஹாதேவியை உல்டா பன்னி எழுதின மாதிரி இருக்கு. அதைப் பத்தி மூச்சே விடலை.
ஓகே..ஓகே.. வந்துட்டேடேடேன்ன்ன்ன்ன்ன்…
இதெல்லாம் டூப்பு… நான் தான் டாப்பு என்று சொல்ற மாதிரி ஒரு கவிஞர் கற்பனை ஓடுது.
ஒரு பெண் ஒரு ஆணை அசைப்படரா.. (எம்ஜிஆர் படத்து சீன் மாதிரி). உன்னை அடையனும் இல்லையேல் சாகனும். இதெல்லாம் எல்லாரும் அடிக்கிற டயலாக் தானே! இந்த நபர் கொஞ்சம் மேலே போறார்.
சாகிற மனுஷி எதை குடிச்சி சாவா? விஷம் தானே.. விஷம் குடிச்சி சாகுற மாதிரி எழுதிட்டா சாதாரண கவிஞர்.
கவிச் சக்கரவர்த்தி எழுதினா எப்படி இருக்கும்? அமிர்தம் குடிச்சே செத்துப்போவேன் என்கிறார். ஆத்தி…ஆத்தி..எம்புட்டு புளுகு..)
அமிரதம் சாப்பிட்டா சாவே கிடையாது..அதை குடிச்சுட்டு சாவேன்னு சொல்ற அந்த கிறுக்கி யாருன்னு நீங்க தெரிஞ்ச்சிக்க வேணாமா??
சூர்ப்பனகை.
ஹீரோ???????
ராமன் தான்
ராமனைப் பாத்து கிறங்கும் இடத்தில் கம்பர் போட்ட பிட்டு இது..
ராமனோட அகன்ற மார்பைப் பாத்தாளாம் சூர்ப்பனகை. அப்படியே தழுவனும் இல்லாட்டி அமுதம் சாப்பிட்டாவது சாவனும் ன்னு அந்த சிச்சுவேஷனை எழுதுறார் நம்ம கம்பர்
பாட்டு இதோ:
நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவென் போக்குஇனி அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்.
நாளைக்கு வேற ஏதாவது கலாய்க்கலாம்..