கடவுளை நம்பாத ஒருசிலர். சில கடவுள்களை வணங்குவர் சிலர். பல கடவுள்களை வணங்குபவர் பலர்.
இதில் ஒருசிலர், சிலர், பலர் என்பதை அங்கங்கே மாத்திப் போட்டு Permutation & Combination செய்தும்
பாக்கலாம்.
பையனுக்கு ஒடம்பு சரியில்லை. சரி ஆனா, திருப்பதிக்கு போய் மொட்டை போட்றேன்னு வேண்டிட்டார் அப்பா. அடுத்த நாள் யாரோ சொல்ல, மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கவும் வேண்டிக் கொண்டார்.
அப்பொ திருப்பதி மேல் நம்பிக்கை இல்லை என்று எடுத்துக்க முடியுமா? அதான் கிடையாது. திருமலைப் பெருமாள் டாக்டரா வந்தா, நம்ம மாரியாத்தா நர்ஸா, கூட வரட்டுமே என்ற நம்பிக்கை தான் காரணம் (சுகி சிவத்திடம் சுட்டது).
சுனாமியின் போது எல்லாரும் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்க.. ஒரு தீவிர பக்தர்.. சாமி என்னெயெ காப்பாத்தும் என்ற நம்பிக்கையோடு, ஒரு மரத்தின் மேல் இருந்தாராம். வழியில் வந்த Rescue Boat “வாப்பா இதிலெ ஏறு கொஞ்சம் பாதுகாப்பான பகுதிக்கு போயிடலாம்”- னு மக்கள் சொன்னாங்க..
நம்மாளு கேக்கலை.. “என்னைக் கடவுள் காப்பாத்துவாறு.. நீங்க போங்க”- என்றார்.
அடுத்து ஒருவர் பெரிய கட்டையில் மிதந்து வந்தார்..அட வாப்பா.. நாம் ரெண்டு பேரும் இந்த கட்டையில் ஏறி உயிர் தப்பலாம் என்றார். நம்ம, கட்டையில போறவன் கேக்கலை.
அடுத்து ஒரு Air Force Helicopter வந்து அழைப்பு தந்தது.. கேப்பாரா நம்மாளு.. கேக்கலையே… கொஞ்ச நேரத்தில் அந்த மரம் சாய்ந்து அவரும் பரமபதம் போய்விட்டார்.
அங்கே நேரா கடவுள் கிட்டெ போய்… “என்னா கடவுளே.. உன்னையெ
நானு எம்புட்டு நம்புனேன்.. இப்படி கவுத்திட்டியே!!..” மல்லுக்கு நின்றார்.
கடவுள் படத்தில் சிரிக்கிற மாதிரியே சிரித்து, “அப்பனே அந்த Rescue Boat, மரக்கட்டை, ஹெலிகாப்டர் இதை எல்லாம் நான் தான் அனுப்பினேன்.. நீ தான்
மறுத்துவிட்டாய். அப்பனே.. நீங்க மட்டும் information age க்கு போய்
விடுவீங்க.. கடவுள் மட்டும் துண்டு போட்டு சங்கு சக்கரம் பாம்பு புலி சகிதம் வரணும்னா ..இன்னா வெளாட்டா” – சொல்லி மறைந்தார்.
இதே மாதிரி ஒரு சாமியார் சிஷ்யன் கிட்டெ.. எல்லாரும் கடவுள் தான்.. எனவே எல்லாரையும் வணங்கனும் என்றாராம். பொறுப்பாய் சரி என்றான் சிஷ்யன்.
அடுத்த நாளே வந்தது சோதனை. ஒரு மதம் பிடித்த யானை ஓடி வந்து கொண்டிருந்தது. எல்லாரும் ஓடிக் கொண்டிருந்தனர். நம்மாளு அட…
கடவுள் வருது.. என்று கும்பிட்டாராம். கூட இருக்கிற மக்கள் அப்பனே..ஓடு..ஓடு ஆபத்து என்றனர்.
இப்பவும் நம்மாளு கேக்கலை. கொஞ்ச நேரத்தில் யானை லாரன்ஸை தூக்கி எறிஞ்ச மாதிரி தூக்கி எறிந்து விட்டது.
நலம் விசாரிக்க வந்தார் குரு. “என்ன சாமி இப்படி மாட்டி விட்டீகளே..? நீங்க தானே சொன்னீங்க.. எல்லாரும் கடவுள்-ன்னு”
குரு இங்கேயும் சிரிச்சிட்டே சொன்னார். “சிஷ்யா.. யானை ஒரு கடவுள். ஆனா உன் பக்கத்திலே எத்தனை கடவுள்கள் (மக்கள்) ஓடு….ஓடு சொன்னாங்களே.. நீ
கேக்கலையே… கடவுள் பேச்சு கேக்காத காரணம் இந்த தண்டனை”
கடவுளை விடுவோம் அது ரொம்ப துரம்… பக்கத்திலெ இருக்கிற
காதலிக்கு சேதி சொல்லவே எத்தனை பேரைப் புடிக்கிறாங்க..
கடலில் மீன் பிடிக்கச் சென்ற காதலன். காதலி “பாட்டுக்கு பாட்டெடுத்து…” என்று அலையெத் தூது விட்றா. அதுக்கு வாத்தியாரு, பூங்காற்றை பதிலா தூது விட்ரார்.. (கூரியர் செலவு ஒரு மண்ணும் கிடையாது).
மேகத்தையும், நிலாவையும் கூட பயன் படுத்தியிருக்காங்க.. எந்தப் பதிலும் வராது என்று தெரிந்தே அனுப்புவது. நம்ம குரூப்ல கூட அப்படித்தானே
அனுப்புறோம்.. ஏதோ ஒண்ணு ரெண்டு பதில் வரும்.
தூதாக வந்த புறாவை சாப்பிட்டு “ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போறா?” என்று புலம்பும் புலிகேசி வடிவேலையும் பாத்திருப்பீங்க..
ஒரு கடவுள்… ஒரு தூது… எல்லாம் மாறி எல்லாரும் இப்பொ, “உங்க இ
மெயில் ஐடி என்ன?” -ன்னு கேட்டா, நாகைந்து அள்ளிக் கொடுக்கிறாங்க.
போதாக்குறைக்கு வில்லங்கமான வேலைகளுக்கு தனி மெயில் வேற
இருக்கு என்பார்கள்..
அப்படியே கொஞ்சம் கம்பர் காலத்துக்கு போனா.. இதே மாதிரி ஒரு சீன் வருது. இராவணன் சீதையை கடத்திட்டு போகும் சமயம்.
யாராவது ராமன் இருக்கிற எடத்தை சொல்ல மாட்டாங்களான்னு கதறனும் சீதை.
சீதை ஹீரோயின் இல்லையா.. இப்படி பொட்டையா கதற முடியுமா என்ன?
அப்புடி இருந்தாலும் கம்பர் உட்ருவாரா அதுக்கு!! மேகம், சோலை, தேவதைகள் மூனு பேரைக் கூப்பிட்டு..ராமன் இருக்கிற எடம் உங்களுக்குத்தான் தெரியுமே.. கொஞ்சம் சொல்லப்படாதா… சொன்னா கொறைஞ்சா போயிடுவீங்க..
கம்பனின் வித்தியாசமான தூதுப் பாடல் இது.
செஞ் சேவகனார் நிலை நீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே வன தேவதைகாள்
அஞ்சேல் என நலகுதிரேல் அடியேன்
உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர்
[மேகங்களே! சோலைகளே! காட்டில் வாழும் தேவதைகளே! சிறந்த வீரம்
உள்ளவரான என் கணவன் இருக்கும் இடத்தை நீங்கள் அறிவீர்கள். “நீ பயப்படாதே! உன் நிலையை உன் கணவரிடம் சொல்கிறோம்!” என்று
ஆறுதல் கூறினீர்கள் என்றால், நான் உயிர் பிழைப்பேன். அவ்வாறு நான் பிழைப்பதால் உங்களுக்கு நஷ்டம் உண்டாகுமா? உண்டாகாது]
ஒண்ணே ஒண்ணுன்னு ஒரு இமெயில் ஐடி மட்டும் வைத்திருப்பவர்கள் இனி மூணு வச்சிக்கிட்டு சுத்தலாம் (Applicable only for mails).
யாராவது கேட்டா.. கம்பரே சொல்லிட்டாருன்னு சொல்லுங்க.. எந்த கொம்பன் கேப்பான் அப்புறம்.
மீண்டும் அலசுவோம்.