தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு இமாலய உயரத்தை எட்டியவர் தான் TMS. அவரின் கலையுலக பயணத்தை நிறுத்தியது எது? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அவரது குரல் வளத்தில் குறையொன்றும் இல்லை இன்றுவரை. உள்ளம் உருகுதைய்யா என்று உள்ளம் உருகப் பாடியதை தினமும் கேட்ட முருகனும் ஒண்றும் செய்ய முடியாதவராய் ஆகி விட்டார்.
காகம் உக்கார பனம்பழம் விழுந்த கதையாய் TMS “என் கதை முடியும் நேரம் இது….” என்று பாடியதால் இப்படி ஆனது என்றார்கள்… ஆனால் இதை ஏற்றுக் கொள்ளவா முடியும்?. TMS பாடாத சோகப் பாடலா?, சோதனை மேல் சோதனை, எங்கே நிம்மதி?… இப்படி பல இருக்க, இந்த என் கதை முடியும் நேரம் அந்த கெட்ட பேரை எடுத்துக் கொண்டது.
இதே ஜாதியில் “நான் ஒரு ராசியில்லா ராஜா..” என்ற பாடலும். பாட சற்றே சிரமமான பாட்டாய் இருந்தாலும் நான் கொஞ்சம் இதை நல்ல விதமாய் (கரோக்கியில் தான்) பாடிக் காட்ட… இதை மேடையில் பாட வேண்டுகோள் வந்தது.. நான் யோசிக்கிறேன்… மேடைக்கு ராசி இல்லாதவன் ஆயிட்டா?? இந்த குரூப் அதுக்கு எப்படி ரியாக்ட் செய்யுதுன்னு பாக்கலாம்.
சில வார்த்தைகள் அவை அந்த அர்த்தத்தில் சொல்லப்படா விட்டாலும் ஏதோ ஒரு காரணம் கருதி அந்த வார்த்தை வந்து விழுகலாம்.
பண்ணித் தலையா… மண்வெட்டித்தலையா … என்று பேசி வலம் வந்த கவுண்டமனி செந்தில்களை எந்த வார்த்தையும் ஒன்றும் செய்யவில்லை.
ஆனா அதே வார்த்தையை தேவரத்தில் சொல்லப் போக… சிவனுக்கே நல்ல காலம் இன்னும் வராமல் இருக்கு.
சமீபத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். மேல்மருவத்தூருக்கு 40 கிமீ முன்பு ஓர் ஊர் கடந்து போனது.. பாதிரிப்புலியூர். இதைப் படித்தவுடன், அடடா… தேவரத்தில் இந்த ஊர் சிவன் பத்தி, ஒரு பாட்டு இருக்கே.. அதைப் பாத்துட்டு வரலமேன்னு திருப்பினேன் வண்டியை.
விசாரித்து போனால், பாழடைந்த கோவில்… பரிதாபமாய் நந்தியும் சிவனும்.. கோபுரங்கள் எல்லாம் சாய்ந்து இருந்தது. அதே பாட்டை பாட உள்ளே சென்றால் வௌவ்வால் மணத்துடன் சின்னதாய் விளக்கும்… அங்கே அதே சிரித்த முகத்துடன் சிவன்.
கவுண்டமணி செந்திலை திட்டுவது போல், தேவாரத்தில் தீவட்டித்தலையா… உன் தலையில் கொள்ளி வைக்க என்பது போல் தோன்றும் பாட்டு இது..
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவாது இருக்க வரம் தர வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்
செழுநீர் புனர் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே..
தீ வண்ணன் நிலை பாத்தா கண்ணீர் வந்தது.. கடவுளுக்கே இந்த நிலையா??
கம்பர் திடீரென்று தேன்றினார்..
இது ரொம்ப தப்பு… இம்புட்டு நாளும் நான் தான் கிளைமாக்ஸில் வந்து போவேன்.. இன்னெக்கி எப்படி தேவாரம் வரலாம்??
என்ன சொல்றீங்க கம்பரே… இந்த சிச்சுவேஷனுக்கு உங்களால் பாட்டு தர முடியுமா??
கம்பர் ஏமாற்றவில்லை…
நீ TMS க்காக இப்படி கவலைப் பட்டு கேக்குறே… இங்கே தசரதன் வாயிலிருந்து வரும் வார்த்தை பாரு. அறுபது ஆயிரம் மனைவிகள், அதிகாரப் பூர்வமா மூன்று மனைவிகள்.. நிறைவாக நரை தெரியும் வரை ஆட்சி (மூன்று மனைவிகள் இருந்தால் அந்த பாக்கியம் தானா வருமோ???) நான் நெறைய கஷ்டப்பட்டேன்.. இனி ராமனும் கஷ்டப்படட்டும்… பட்டபிஷேகத்துக்கு முன்பு வந்து விழுந்த வர்த்தைகள்.. ராமன் படப்போகும் சிரமத்தின் எச்சரிக்கை மணிகளா??/
தசரதன் சொல்கிறார்: புள்ளெயே இல்லையேன்னு ரொம்ப கவலைப்பட்டுக் கிடந்தேன் பலகாலம். அதுக்கப்புறம் தான் வந்தான் ராமன். என் தலையில் இருக்கும் பாரத்தை அவன் கைக்கு மாத்தனும். அவனும் கொஞ்சம் கஷ்டப் படட்டும்.. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமான்னு நெனெக்கிறென்.
மைந்தரை இன்மையின் வரம்பு இல் காலமும்
நொந்தனென் இராமன் என் நோவே நீக்குவான்
வந்தனன் இனி அவன் வருந்த யான் பிழைத்து
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன்.
இப்போ சொல்லுங்க…
நான் ஒரு ராசியில்லா ராஜா பாட்டு பாடித்தான் ஆகனுமா??