தெனாலி என்று ஒரு கலக்கல் காமெடி படம். இதில் கமல் ஓர் ஈழத்து இளைஞரா வந்து கலக்குவார். நடிப்பிலும் இலங்கைத் தமிழிலும். இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல்ஹமீது தான் பயிற்சியாளராம். அதில் எஞ்சிருங்கோ..எஞ்சிருங்கோ என்றால் நம்மூர், என்னங்க என்பதின் ஈழத்து வடிவாம்.. (வடிவு என்றால் அழகு… அப்போ வடிவுக்கரசி??? அவங்களும் ஒரு காலத்தில் ஹீரோயின் தான்.) இங்கே நான் சொல்ல வந்தது, எந்திரிங்கோ பத்தி..
ஊரெங்கும் எழுப்புதல் கூட்டம் என்று அடிக்கடி நடக்கிறது…அப்போ பகலில் கூடவா தூங்கறாங்க… யாரையோ.. எதற்கோ… தட்டி எழுப்பும் கூட்டம் அது..
கனவு காணுங்கள் என்றார் நம் கலாமய்யா… நம்மாள் கேக்கிறான்.. தூங்கினாத்தானே கனவு வரும்…ஆபீஸ், கிளாஸ்ரூம் இதிலே தூங்கிடவா??? என்ன செய்ய?? ஆயிரம் கலாம் வந்தாலும் அறியாமையில் தூங்கும் இப்பேற்பட்ட ஆட்களை எழுப்ப முடியுமா??
ரொம்ப குடுத்து வைச்ச ஆசாமி.. எங்கே படுத்தாளும் தூங்கிடுவார் என்று எனக்கு ஒரு நல்ல பேர் உண்டு. ஆனால் எழுப்புதல் சிரமமான காரியம்.
அது கிடக்கட்டும்.. இறைவனை எழுப்பும் பாடல்கள் செம பாப்புலர். கௌசல்யா சுப்ரஜா ஆகட்டும், திருப்பாவை திருவெம்பாவை ஆகட்டும்.
சிறுவயதில்… மார்கழியில் அதிகாலை எழுவது மட்டும் ஏதோ எனக்கு பிடிக்காத காரியம். அதிலும் குளிரும் போது போத்திப் படுப்பதில் சுகமே சுகம்….அலாதி சுகம். ஒரு முறை நான் எழுந்து கோவிலுக்கு போய் வந்து விட்டேன். எல்லாருக்கும் ஆச்சரியம்.. எப்படி? என்று.. நானும் சாட்சிக்கு உலர்த்திக் காய வைத்திருக்கும் துண்டு & ஜட்டியினை காட்டினேன். எல்லாரும் நம்பிவிட்டார்கள். குளிருக்குப் பயந்து குளிக்காமல், அவைகளை மட்டும் நனைத்துக் காயப் போட்டு விட்டு கோவிலுக்கு போனேன் என்பதை என் பையனிடம் ஜாலியான நேரத்தில் ரொம்ப வருஷம் கழித்து உளறிவிட்டேன். அதை அப்படியே என் அம்மாவிடம் போட்டும் கொடுத்து விட்டான்.
ஒரு நாள் என் பையன் கேட்டான்… ஏன் இந்த IT ஆட்கள் ராவெல்லம் முழிக்கனும்? என்று. நான் சொன்னேன், இங்கே இரவு… அமெரிக்காவில் பகல்..அதான் நாம் அவர்கள் பகலுக்காக இந்தியாவில் ராவெல்லாம் முழிக்கிறோம். அவன் கேள்வி தொடர்ந்தது.. எப்போ அவங்க நம்ம பகலுக்காக ராத்திரி முழிப்பாங்க?? நான் பதில் தெரியாமல் முழித்தேன்.. 2020 என்று பதிலும் பையன் சொன்னான்…
கலாமய்யாவிடம் ஒரு பத்து நிமிடம் அந்தமான் வந்தபோது பேசி இருக்கிறான்… வருங்காலம் யோசிக்குது..
தூங்குறது இருக்கட்டும்… எழுப்பும் கலை பற்றி யோசிக்கலாமா??? தூங்கும் ஆளை எப்படி எழுப்ப?? தூங்கும் ஆளை எழுப்பலாம்…தூங்குவது மாதிரி நடிப்பவனை எழுப்புவது கஷ்டம். (இதை எந்த வாய் சண்டையின் கிளைமாக்சிலும் தவறாமல் கேக்கலாம்)
ஹஜாரே போர் ராம்லீலா மைதானத்தில் நடந்து கொண்டிருந்த போது அரசியல் வாதிகளின் முகத்தில் கவலை ரேகைகள். இங்கும் அரசு வட்டாரத்த்லும் சோகமோ சோகம்… எனக்கு ஒர் பழைய படத்தில் வில்லன் வீரப்பா பேசிய டயலாக் ஞாபகம் வந்தது. … தூங்குறவனை தட்டி எழுப்பி, அவன் கையில் வாளையும் கொடுத்து தலையையும் நீட்ட சொல்கிறான்…
இது ஒரு பக்கம் இருக்கட்டும்…
நான் சிறு வயதில் செய்த சேட்டைகளை என்பையன் இப்போ செய்கிறான். அவனை எழுப்புவது மிகவும் சிரமமான காரியம். அவங்க அம்மா பொறுமை தன் லெவல் மீறி கத்தினால் தான் எந்திரிப்பான். ஆனா… அவனுக்குப் பிடிச்ச பொம்மை ஹெலிகாப்டரை ஓட விட்டு அந்த சத்தம் மட்டும் கேட்டால் போதும் எழுந்து விடுவான்.. (ஆமா..அதுக்கு 500 செலவு & அடிக்கடி பேட்டரி வேற மாத்தனும்)
சிமெண்ட் மூட்டையை அடுக்கி வெளியே எடுக்கும் போது..FIFO (First In First Out) என்பதை கையாள வேண்டும் அதே மாதிரி.. 2 மணி நேரத்தும் முன்னால் borading Pass வாங்க போகும் என் மதிரி ஆட்களின் லக்கேஜ் (FILO – First In Last Out ) தான். தூங்கும் போது காது தான் கடைசியில் தூங்கப் போகுமாம். எனவே இந்த FILO முறை எழுப்ப ஏதுவானதாம்.. கண்ட இடத்தில் தட்டி எழுப்பினால் விவரீதங்கள் வருமாம்.. அப்போ எழுப்பும் முறை தான் என்ன?
அதுக்கு The School of Sleepalogy க்கு போனா..என்ன??
அட.. அங்கே நமக்குத் தெரிஞ்ச பேர் தான்… Dr Kambar அங்கே தான் இருக்கார். விசாரிச்சா போச்சு…
எல்லாரும் பிரிஷ்கிருப்சன்லே மருந்து மாத்திரை தருவாங்க…இவர் பாட்டு எழுதி தந்தார்..
வாலியின் வதம் முடிஞ்ச கொஞ்ச நாளுக்கு அப்புறம்… சுக்ரீவன் கொஞ்சம் அதிகமா குடிச்சி ஓவர் ஹேங்க் ஆகிவிட, Govt Office மாதிரி No Response. கோவமா இலக்குவன் வந்து விசாரிக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட நம்ம ஜுனியர் அங்கதன், சுரீவனை எழுப்புறார்… இதெப் பாத்து எழுப்பும் விதம் கத்துக்குங்க…
பொன்போன்ற காலடியை நன்றாகப் பிடித்துக் கொடுத்து தடவி துயில் எழுப்பனுமாம்… இது எப்படி இருக்கு??.. நாளைக்கு ஒரு டிரையல் அவங்கவங்க கணவன்/மனைவியினை இப்படி எழுப்பிப் பருங்களேன்.. (வீட்டிலே சண்டை சச்சரவே இனி இருக்காது.. அதான் காலைப் பிடிப்பது கை வந்த கலையாகிவிடுமே!!!)
போனபின் தாதை கோயில் புக்கு அவன் பொலங் கொள் பாதம்
தான் உறப்பற்றி முற்றும் தை வந்து தடக் கைவீர
மானவற்கிலையோன் வந்து உன் வாசலின் புறந்தான் சீற்றம்
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான்.
குடும்ப சிக்கல் தீர தேடல்கள் தொடரும்…