இது தான் உங்க ஊர்ல ஃபுல் பேண்டா??


அந்த 1980களில் மிக பாப்புலரான கவுண்டமனி செந்தில் டயலாக்கில், இந்த ஆஃப் பேண்ட் பத்தின சர்ச்சையும் ஒண்ணு. (இதை விட சுவாரஸ்யமான சமாச்சாரம் … கவுண்டமனி, அப்பாவியாய் மூஞ்சி வைத்து நிக்கும் ஆஃப் பேண்ட் அணிந்த செந்திலிடம் கேக்கும் கேள்வி: “என்னைப் பாத்து ஏண்டா இப்படி கேட்டே?”. அதை கொஞ்சம் விலாவாரியாக எழுதப் போக, சிலர் கண்டிக்க ஆரம்பிச்சிட்டா…. ஒகே..ஒகே.. ரொம்ப நல்ல புள்ளையா மட்டும் எழுதுவோமே..)

என் பையனோட ஸ்கூல் யூனிபார்ம் ஆஃப் பேண்ட் தான் போன வருஷம் வரை. இந்த வருஷம் ஏழாவது போனவுடன் ஃபுல் பேண்டுக்கு வந்துட்டான். அதை போட்டு போகும் போதே ஒரு கம்பீரம் வருதாம். ஏதோ மத்த 6 ம் கிளாஸ் படிக்கும் பசங்களை விட நாம ஒசத்தி என்ற feelig வருது என்கிறான். (சந்தடி சாக்கில் இன்னும் ஒரு  நன்மை இருப்பதையும் சொன்னான்… நீங்க ஒரு நாள் அவசரத்தில் ரெண்டு காலில் வேற வேற மாடல் சாக்ஸ் மாட்டி விட்டீங்க..ஆனா அது இந்த ஃபுல் பேண்ட் போட்டதால் தெரியாமலே போச்சி.. தப்பிச்சேன் என்றான்.)

அரைக்கை சட்டையை விட முழுக்கை சட்டை ஒரு கம்பீரம் தரும். செமினார்களில் பெரும்பாலும் முழுக்கை சட்டை தான் அணிந்து வருகிறார்கள்…. கேப்பவர்கள் இல்லை…படம் காட்டவும் பாடம் நடத்தவும் வருபவர்கள் தான் இப்படி வருகிறார்கள். ஆனால் டி வி செய்திகளை உற்றுப் பார்த்தால் பெரிய பதவி வகிக்கும் அதிகாரிகள் இந்த முழுக்கை சட்டை அணிவதில்லை அல்லது இன் செய்வதுமில்லை..(ஒரு வேளை தொந்தி கொஞ்சம் தூக்கலாத் தெரியும் என்கிற காரணமாய் இருக்குமோ??)

எப்படியோ இந்த இன் செய்யும் கலை யூத் என்பதையும்… நெட்டில் போஸ்ட்   செய்யும் ISO தரமான நபர என்பதையும் நிரூபிக்க உதவுது.

இதைத்தான் அந்தக் கால கவுண்டமணி வாயில் வருது..: வர்ரப்போ… ஆஃப் பேண்ட் போட்டு வந்தான்..இப்போ ஃபுல் பேண்ட் போட ஆரம்பிச்சுட்டான்..இனி இன் பண்ணியிருவாண்டா….

 இது தான் வளர்ச்சியின் உருமாற்றங்கள்..

நான் முழுக்கை சட்டை போட்டு இன் செய்ய ஆரம்பித்தது ஒரு எதிர் பாராத விபத்து.

ஒரு முறை (1987 என்று ஞாபகம்) ஒரு நண்பரைப் (நாதம் ரஃபீக்) பாக்க Long Island சென்றிருந்தேன். (பேரு தான் Long Island… அது மிகவும் சின்ன தீவு தான்). அவரைப் பாத்துட்டு அன்றே திரும்ப ஏற்பாடு. ஆனால் நண்பரும் அவரின் பக்கத்து வீட்டு ஆண்டியும் அவரின் துறுருதுறு மகளும் (அண்ணா அண்ணா என்று மூச்சுக்கு முன்னூறு தரம் அழைத்ததும்) கேட்டு ஒரு நாள் தங்க வேண்டியதாய் விட்டது.

மாற்றுத்துணி கைவசம் இல்லை. நண்பன்டா என்று துணி குடுத்தான். (தோள் குடுப்பவன் மட்டுமே தோழன் இல்லை. துணி குடுப்பவனும் தோழன் தான்.)

கைவசம் வந்து சேர்ந்த சட்டை முழுக்கை சட்டை. நான் அதுவரை அப்படி சட்டை போட்டதே இல்லை. ஏதோ மனீஷா கொய்ராலா அழகான ராட்சஷியே பாட்டுக்குள் நிக்கிற மாதிரி ஒரு feeling. என் உடம்புக்கு கொஞ்சம் தொள தொள ஆகி விட்டது.. எப்படி சமாளிக்க.. அட்வைஸ் வந்தது…. இன் செய் மாமூ என்று..

அட..அதுக்கு பெல்ட் வேணுமே??? சட்டை தருபவன் பெல்ட் தரமாட்டேனா??? பதில் வந்தது.

அன்று முதல் இன்று வரை முழுக்கை இன் செய்து பெல்ட் போடும் executive  கலாச்சாரம் தொடர்கிறது. ஒரு தொள தொள சட்டை ஓசியில் போட்டதுக்கு இவ்வளவு பில்டப்பான்னு சண்டைக்கு வராதீங்க..

போன வருடம் என் அம்மா, மாமா, அத்தை (மமி) ஆகியோருடன் அந்தமான் வந்தார்கள். இதுவரை அவர்கள் விமானத்தை வானத்தில் அன்னாந்து தான் பாத்தவர்கள். அவர்களை விமானத்தில் பறந்து வர வைக்கணும் என்ற என் ஆசை. எல்லாம் கூடியது அப்போது.

அடுத்த முறை பரமக்குடிக்கு சென்ற போது அந்தமான் எப்படி? என்று கேட்டேன். அத்தை தந்த பதில்: எல்லாம் நல்லா இருந்தது.. அங்கே ஏன் எல்லாரும் செந்தில் டிரௌசர் போட்டு சுத்துறாங்க???

அடப்பாவமே…அப்பத்தான் உறைக்குது.. நானும் மத்த, நான் அழைத்து சென்ற நண்பர்கள் வீடுகளிலும் அவர்கள் இந்த பெர்முடாஸ் தான் போட்டிருந்தார்கள்… இதை பரமக்குடியில் செந்தில் டிரவ்ஸர் என்று பேர் குடுத்திருப்பது எனக்கு எப்படி தெரியும்?? (வருஷத்துக்கு ஒரு வாரம் மட்டுமே ஊரில் இருந்தா.. இதெல்லாம் எப்படி தெரியும்???)

தொடைகள் தெரிய பெர்முடாஸ் போடுவது மகளிருக்கு பிடிப்பதில்லை என்பது மகளிரின் தாழ்மையான கருத்தாம். – இது என் மனைவியின் கருத்து. ஆனா ரம்பா தொடை அழகை விவரிச்சி எழுதுற ஆட்கள் ரம்பாலீலா மைதானுக்கு வாங்கன்னு சொல்லிப் பாருங்க…கூட்டம் அலை மோதும்.

பெர்முடாஸ் அணிவது அவ்வளவு மோசமானதா??… அப்படியே கொஞ்சம் யோசித்தேன்..

உங்க ஊகம் சரிதான்… இப்போ நேரே கம்பராமாயணம் தான் போறேன்..

அடே.. அங்கும் ஒரு அந்தமான் மாதிரி காடு.. அதில் ஒருத்தன் பெர்முடாஸ் போட்டு நிக்கிறானாம்… ஐயா… நான் சொல்லலை..  ராமாயணம் மேலே சத்தியமா சொல்றேன்… கம்பரே சொல்றார்….

அங்கேயும் தொடை தெரியும் உடை..

Echo Sounder  போன்ற கருவிகள் இல்லாமலேயே தண்ணியின் ஆழத்தை கண்டு பிடிப்பவனாம் அவன். (பெண்களின் மனதின் ஆழத்தை அளக்கும் கருவி தெரிந்தால் உடன் விவேக்குக்கு சொல்லவும்).

பெர்முடாஸ் கலர் சிவப்பாம். அவன் தோலுக்கு மேட்சிங்காக…இடுப்புல புலி வால் தான் பெல்ட்டாம்..

இந்த மாதிரி காஸ்டியூம்லே எண்ட்ரி தரும் ஹீரோ எவன்?

 யார் அவன்..?? அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்… அவன் தான் குகன்…

 காழம் இட்ட குறங்கினன் கங்கையின்

ஆழமிட்ட நெடுமையினான் அரை

தாழ விட்ட செந் தோலன் தயங்குறச்

சூழ விட்ட தொடு புலி வாலினான்.

காழகம் – ஆஃப் டிராயர்  என்று உரையாசிரியர் எழுதி வைக்க எனக்கு ஒரு போஸ்டிங்க் போட வசதியாப் போச்சி..

 இன்னும் ஏதாவது சிக்குமா பாக்குறேன்..

2 thoughts on “இது தான் உங்க ஊர்ல ஃபுல் பேண்டா??

  1. Ram says:

    I don’t know how to wear kaili. I wear 3/4 instead , everyone is seeing me different like i killed someone . When these people are going to understand.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s