பார்த்தேன்..
சிரித்தேன்
பக்கம் வரத் துடித்தேன்
இது மலைத்தேன்
என நான் மலைத்தேன்.
தேன்… தேன்என்று முடியும் அருமையான பாட்டு அது. கேக்கும் போதே காதில் தேன் விழுந்த மாதிரியே இருக்குமே!!
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலேன்னு சொன்ன பாரதியை யோசிச்சா சரிதான்னு தோணுது.
அது என்னமோ தேனுக்கும் இசைக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிற மாதிரி இருக்கே…??
இது ஒரு தேனிசை மழை என்று வெளிவந்த படம் நினைத்தாலே இனிக்கும்… பாடல்கள்இன்றும்கேட்டால்இனிக்கும்…ஹீரோயினைநினைத்தால்இன்னும்இனிக்கும்.
தேனிசைத் தென்றல் தேவா.. (தானாவுக்குத் தானா என்று குடுத்திருப்பாங்களோ… எப்படி இருந்தாலும் இசை ஒரு தேன் சுவை தான்)
தேன் விருந்துக்கும் மருந்துக்கும் யூஸ் செய்யலாம்.
தேனின் குணம் அதை சார்ந்துள்ள பொருளால் மாறும். இது என்ன புதுக் கதை?
தேனும் குளிர்ந்த நீரும் சேர்ந்தால் உடல் எடை போடுமாம்
தேனை சுடு நீரோடு கலந்து அடித்தால் எடை குறையுமாம்.
தேனோடு ஏன் மக்கள் அப்போ நிலவை சேத்தாங்க?
தேனை அதிகம் சாப்பிட்டால் திகட்டும். நிலவோ 15 நாளில் கரைஞ்சி காணாமல் போய்டும். இப்படி இருக்கும் ரெண்டையும் சேத்து இளம் ஜோடிகளை தேனிலவுக்கு அனுப்பி வைக்கிறாய்ங்க.. (இதை ரூம் போட்டு இவ்வளவு வருஷம் கழிச்சி யோசிக்கிறேன்..).
திருவாசகத்தேன் என்பார்கள்..
ஒரு மரத்துக் கள் தெரியுமா?? செமை டேஸ்டா இருக்குமாம்… யாரோ கதை கட்டி விட… பரமக்குடியிலிருந்து எமனேஸ்வரத்துக்குவண்டியில் போய், வழியில் கல் மோதி விழுந்து… கள், கல் மூலம் பாலானதும், எமனிடம் போகாமல் திரும்பியது எல்லாம் எனது வாலிப காலத்து நண்பர்களின் கதை..
ஒரு மரத்து கள்ளே அவ்வளவு சுவை என்றால், ஒரே பூவிலிருந்து எடுத்த தேன் எப்படி இருக்குமாம்?
சிவபெருமானின் மலர் பாதம் என்ற பூவிலிருந்து உறிஞ்சி எடுத்த தேன் தான் திருவாசகமாம்.. இளையராஜா சிம்பொனியில் கேட்டால் நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.
மாசற்ற சோதியே… என்று சொல்லும் போதே.. மனசு லேசா…லேசா..அப்படியே பறக்கும்.
தேன் சிந்துதே வானம்… என்றும் மழையை நவீன இளங்கோவடிகள் போற்றியுள்ளனர். கூரையில் மழை நீர் ஒழுகினால் பாட்டு பாடவா தோணும்? அது… வீட்டில் உள்ள பெண் காதலியா இருக்காளா? இல்லையா? என்பதைப் பொருத்தது அது.. படத்தில் வாடகை வீட்டில் சிவகுமார்… அதாங்க சூர்யாவோட அப்பா… ஜெயசித்ராவோடு பாடும் பாடல் அது.
ஒரு காரியம் சீக்கிரமா, அதுவும் நெனைச்சதை விட சீக்கிரமா முடிஞ்ச்சா, பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து என்பார்கள்…
இப்படி வழுக்குதலை நம்ம கவிஞர்கள் எப்படி எல்லாம் பாத்தாங்க தெரியுமா??
கண்ணுக்குள்ளே போயி டிக்கெட் வாங்கி, இதயம் வரை சென்று உயிரோடு கலந்துவிடும் பெண் ரயில் பயணம் தான் காதலாம்.
வைரமுத்துவின் வைர வரிகள்: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே…!!
இப்படி விழுந்து விழுந்து தேன் பத்தி எழுதி… கடைசியில் எதைப் பத்தி எழுதப் போறேன்னு பாக்கீகளா???
தேனில் வழுக்கி விழுந்தவர்கள் பத்தி தான் இன்றைய டாபிக்.வாழ்க்கையில் வழுக்கி விழுந்தா அது சகஜம் மாநகரில்
தேனில் வழுக்கி இழுந்தா அது கிஷ்கிந்தா வானரம்.(எப்படியோ அங்கே சுத்தி, இங்கே சுத்தி .. வழுக்கி கம்பரைப் பிடிச்சி நிக்கனும்..அவ்வளவு தானே!!)
மதம் பிடிச்ச யானைகள், சந்தன மரத்தையும் அகில் மரத்தையும் பிடுங்கி எறிய, அது தேன் கூட்டில் பட்டு, தேன் ஒழுக… அந்த மலை முழுசுமே போவதற்கு கஷ்டமா இருந்ததாம் ராமர் போக… வானரங்கள்எல்லாம்வழுக்கிவிழ… பாட்டுஇப்படிவருது.
மருண்ட மா மலைத்தடங்கள் செல்லல் ஆவ அல்மால்
தெருண்டிலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால்
இருண்டகாழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்ட போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே..
இன்னும் வழுக்கிப் பாக்கிறேன்… ஏதாவது சிக்காமலா போகும்??