எனக்கு மட்டுமல்ல..உங்களில் அனைவருக்கும் பிடித்த விவேக் காமெடி..” அஞ்சி ரூபா பிரியாணி துண்ணா.. காக்கா குரல் வராம… உண்ணி கிருஷ்ணன் குரலா வரும்?”
ஆக அந்த அஞ்சு ரூபா பிரியாணி தயார் செய்பவன் காக்கா பிடிக்கலாம். ஆனா நாம காக்கா பிடிக்கலாமா??
என் அலுவலகத்தில் திடீர் என்று சில டை கட்டிய ஆசாமிகள் ஆஜர் ஆவார்கள். (எனக்கு என்னமோ இந்த டை கட்டுவது என்றால் பெரிய அலர்ஜியாய் இருக்கு). சம்பிராதயமான விசாரிப்புகள் தொடரும். ஹிந்தியிம் English ம் கலந்து போசுவோம்.. கடைசியில், சார் நீங்க தமிழ் நாடா? என்ற கேள்வி வரும். ஆமாம் என்றால் உங்களைப் பாத்தா தமிழர் மாதிரி தெரியலை சார்.
அப்படியா… இந்த ஆச்சரியம் நான் என் முகத்தில் காட்டியாகனும்.. (கொஞ்சம் வெட்கம் கலந்த சந்தோஷத்தையும் காட்டி நடிக்கவும் வேண்டும்)
ஆமா.. நானு உங்களை ஏதோ வட நாட்டவர் என்று நினைத்தேன்…
சரி..என்ன வேலையா வந்தீர்கள்??
அப்புறம் வந்த வேலை தொடரும்..
இதில் காக்கா வந்து உக்காந்ததைப் பாத்தீகளா??
இல்லையா?? இன்னொரு ஆள் வருகிறார். அவரைப் பாருங்க..
சார் கம்ப்யூர்லே நீங்க பின்னிப் பெடலெடுக்கிறீங்க.. (எனக்கு தெரிந்த கணிய அறிவு என் பையன் படிக்கும் 7ம் வகுப்பிற்கே உதவுவதில்லை..இது தான் உண்மை)
தமிழ் எல்லாம் கம்ப்யூட்டர்லே எழுதுவீங்களாம் இல்லே?? . எப்படி சார்?? RTI யாருக்கும் பயனில்லை என்று நினைக்கிறேன்… நீங்க என்ன நினைக்கிறீங்க???
இதுக்கு என் பதில் தொடரும்…
ஐந்து பத்து நிமிடங்களுக்குப் பின், என்ன விஷயமா வந்தேன்னா… இனி தான் ஆரம்பிக்கும்.
சில நபர்கள் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடை முறைகள் என்று பக்காவான டிரைனிங்க் எடுத்த ஆட்களும் உண்டு.
இந்த காக்கா தேவை தானா..? நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தா என்ன ஆகும்?
Starting Trouble இல்லாம வண்டி ஓட இந்த காக்கா தேவைப்படுது. அல்லது பல்ஸ் பாத்து பேசுன்னு அவங்க ஊரு அவ்வை சொல்லி இருக்கலாம்.
இந்த விஷயத்தை இப்படிப் பாத்தா என்ன??
கல்யாணம் செய்யாம இருக்கிறப்போ கஷ்டமா இருக்கும். காதலியை சந்திக்கும் இடம் சந்தோஷம். கல்யாணம் செஞ்சிகிட்டா ஜாலி தான்.. கொஞ்ச நாள் போனா அப்புறம் பிரச்சினனைகள் வரும்.. கஷ்டம் தான். சரி மனைவி பிரிந்து போனால், அதுவும் சிரமம் தான். (ஐந்தில் மூன்று கஷ்டம்)
ஆக சந்தோஷமான ஒரே தருணம்… அந்த “வரும் நேரம்” தான்… “சந்தித்த வேளையில்” என்பார்களே.. அதை கொஞ்சம் கலகலப்பாய் ஆக்கும் முயற்சி தான் இந்த காக்கா என்கிறேன் நான்.
தேவாரத்தில் சுந்தரர் சிவனை ஐஸ் வைத்திருக்கார் தெரியுமா?? மத்தவங்களை விட இந்த மனுஷன் அதிகமா ஐஸ் வச்சாகனும்… ஏன்னா..பித்தா என்று கண்ணா பின்னாவா சாமியையே திட்டுன நபர் இவர்.
பொன்னார் மேனியனே என்று ஆரம்பிக்கும் பாடலில் கடைசியில் “அண்ணே நின்னையல்லால் யாரை நினைப்பேனோ..??” என்று பாடி கொஞ்சம் சமாளிக்கிறார்.
என்ன…காக்கா ஐஸ் சமாச்சாரம் ஜீரனிக்க முடியவில்லையா??
நீங்க ஒத்துக்க மாட்டீங்களா??
ம்… ராமாயணத்திலேயே இப்படி காக்கா… ஐஸ் வைத்த இடம் இருக்கு… அதை சொன்னா நம்புவீங்களா..
கம்பரே நம்ம கட்சிங்க… வேற எந்த கொம்பரும் ஒண்ணும் கேக்க முடியாது…
விசுவாமித்திரர் அயோத்திக்கு வருகிறார் ஏதோ வேலையா… அதுவும் ராஜாகிட்டே.. இவரோட கோபம் தான் நம்ம நாசரோடோ மூக்கு மாதிரி உலகத்துக்கே தெரிஞ்ச சேதியாச்சே?? அப்போ தசரதனுக்கு தெரியாம போகுமா?? ஐயா ஆர்டர் போட்டா அதுக்கு அப்பீலே கிடையாது.
இருந்தாலும் முனி ஆரம்பிக்கிறார் இப்படி: ஏன் இங்கே வந்திருக்கேன்னு பாக்கீகளா?? என்னைய மாதிரி முனிகளுக்கும் ஏன் தேவர்களுக்கும் ஏதும் வேணும்னா, நாங்க போறதுக்கு எங்கே போக்கிடம் தெரியுமா??
மத்த மலையைப் பாத்து சிரிச்சி விளையாடும் கயிலை மலை, பாற்கடல், பிரம்மாவோட சத்தியலோகம்..கற்பக மரங்களை உடைய அமராவதி நகரமும்…….. ஒண்ணு வுட்டேனே… அழகிய மாளிகையினைப் பெற்ற இந்த பொன்மயமான அயோத்திக்குத்தான் போவோம்…
இப்போ எதுக்கு வந்தேன்னா…. அப்புறம் தான் வந்த காரியம் ஆரம்பிக்குது.. விசுவாமித்ரருக்கே பல்ஸ் பாத்து பேசும் இயல்பு இருக்கறச்சே… நமக்கெல்லாம் வேணாமா??
என் அனைய முனிவரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையவரானால்
பல் நகமும் நகுவெள்ளிப் பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து
அந் நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணிமாட அயோத்தி என்னும்
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய்.
நீதி: காக்கா பிடிங்க… காக்கா பிடிப்பதே தெரியாம பிடிங்க…
உங்களிடம் யாராவது வந்து காக்கா பிடித்தால், அது உண்மைன்னு மட்டும் நம்பிடாதீங்க…தள்ளி நின்னு ரசிங்க… ஜாலியா இருக்கும்.
காக்கா பிடிக்காம அடிக்கிற காமெண்டு !
என்னமோ எழுதுரீங்க; எப்படியோ எழுதுரீங்க. ஆனா கடைசியில தான் கம்பரைக் கூட்டிக் கொண்டு வந்து எங்களெ குளிப்பாட்டி ’டக்’ என்று முடித்து விட்ரீங்க !
கமபரை ஒரு ஜனரஞ்சகமான இன்றைய இளைய தலை முறையிடம் எடுததுச் சென்றிடும் எனது சிறு முயற்சி இது… கொஞ்சம் அங்கே சுத்தி இங்கே சுத்தி கடைசியில் கம்பன் காலில் விழும் உத்தி.
இத்துனூண்டு காக்காக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கு …கலக்கீட்டிங்க போங்க!
நன்றி… கம்பனின் கலக்கல்கள் தொடரும்.